Monday, May 5, 2008

என் சிறுகதை - அதுவே தான் எல்லாம்

குட்டி இந்தியா நிலையம் விட்டு வெளியே வந்தபோது தூறிக்கொண்டிருந்தது, தார்ப்பாய்களுக்குள் காய்கறிகளும், பழங்களும் நனைந்திருந்தன, தேக்காவில் ஒரு காபி ஓ-வுக்காக போய்க்கொண்டிருந்தேன், தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரத்தில் அட்டையை செருகி தட்டியதும் நீலத் தாள்கள் கைகளில் படபடக்க, சட்டைப்பையில் வைக்கவில்லை, அதற்குள் நெடுநெடுவென ஒல்லியான ஆள் வந்து நின்றான்.
'போலாமா சார்!'
'எங்கப்பா?'
'சரவண ன் தானே நீங்க?'
'ஆமாம்!' என்று இழுத்தேன், அடுத்த மழைக்கு அனைவரும் பதுங்க ஓடினார்கள்
வாடகை காரை கை காண்பித்தான், சீன ஓட்டுநர் ஒற்றைக் காதில் கைய்யடக்கத்தை கொடுத்திருந்தார், எடுத்துவிட்டு 'எங்கே?' என்றார், அவன் சொல்லிவிட்டு முன் சீட்டில் அமர்ந்துகொண்டான், பின்புறம் ஏறிக்கொண்டேன், கெர்பா சமீபம் வண்டி நின்றது, ஒருத்தி ஏறி என் அருகில் அடக்கமாக உட்கார்ந்துக் கொண்டு என்னை வாசனைப் பார்த்தாள், வயது இருபத்தஞ்சுக்கும் இருபத்தேழுக்கும் நடுவில் இருக்கலாம், மாங்காமாலை,தொங்கட்டான், ஒற்றை மூக்குத்தி, தோளில் ஒரு தோல்பை, முன்னம் முடிகள் சுருள் சுருளாக கண்ணம் வழிந்தது, இறக்கி கட்டிய நைலக்ஸ் புடவை, யு கழுத்து, சந்தனபொட்டுக்கு அருகில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு, அக்குளில் கொஞ்சம் வியர்வை, சரி கதைக்கு வருகிறேன்,
'நைனா ஆளா நீ?' கேட்டாள்.
'ஆமாம்' - வண்டி முஸ்தபா தாண்டி ஒதுக்குப்புறமாய் நின்றது இறங்கினோம், என்னை அழைத்தவன் ஒன்றும் பேசாமல் இறங்கி விடு விடுவென நடந்துபோனான், ஒரு போலிஸ் கார் விர்ரென்று பாய்ந்து போனது, பணம் தந்தேன், இறங்கினோம்
'நாஸ்த்தா கட்டிக்கலாமா துரை!'
'எதுக்கு?'
'அப்புறம் ஒரு தபா ஒடியார முடியாது பாரு, எனக்கு ஒரு பாயாவும், அம்பது பைசாவுக்கு சோறும் வாங்கிக்க போதும், மணி பத்தரை ஆவுது, குடிக்க எதாச்சும் வாங்கிக்க, எனக்கு ஹாட்டு வேணாம்'
இருபதுக்கு இருபது அறையில் அலங்கோலமான படுக்கையும், தட்டுமுட்டு சாமாண்களும், நேற்று இரவின் குடித்த பியர் போத்தால்களும், மீ-கூரிங்கின் எறும்புகளும், சில சிகரெட் துண்டுகளும் இறைந்திருந்தன, அவள் ஒரு துண்டு எடுத்து உதறி பெருக்கி
'நீ குந்து துரை, வந்துடறன்', என்று பாத்ரூம் கதவு சாத்திக்கொண்டாள், உள்ளே குழாய் சத்தத்தில் அவளின் 'மயிலிறகே..' பாடிக்கொண்டே குளிக்கிறாள், தரையில் விரித்திருந்த படுக்கையில் இறைந்து கிடந்த மல்லிகை உதிரிகளை தள்ளி விட்டு உட்கார்ந்தேன், அருகில் ஏதோவொரு மன்மதக்கலை மூணு வெள்ளி புத்தகம், தேக்கா உபயம், தலைகானியிலிருந்து எட்டிப்பார்த்தது
பத்து சதவீத உடையில் வெளியே வந்தாள், வாசனை அடித்தது, புது ஷாம்பு மணம்
'வண்ட்டன் துரை, போரடிக்குதா!, புக்குப் பாரு!'
மெலிதான ஒரு நைட்டியில் தலையை முடிந்துகொண்டாள், சைடு ஊக்கின் இரண்டு பக்கமும் கைபையில் வைத்திருந்த இரண்டு முழ மல்லிகை பூவை வைத்துக்கொண்டு ஒன் மேன் ஷோவை ஈஷிக்கொண்டு என்னிடம் கேட்டாள்
'புதுசா?'
'ஏன்?'
'புதுசான்னுக் கேட்டேன்'
'ஆமாம்'
'ஒன்னுஞ் செஞ்சடமாட்டன், சின்ன பைய்யனா இருக்க', என் தலையை கலைத்துவிட்டு, கலுக்கென்று சிரித்துவிட்டு லிப்ஸ்டிக், அப்புறம் ஒரு பாடலின் முணுமுணுப்பு, குட்டிக்குறா பவுடர், அப்புறம் சாமி படம் முன் கண் மூடி ஒரு நிமிடம் நின்றாள்
'நீ சாமியெல்லாம் வைச்சிருக்க'
'எனக்கு நஞ்சானும் குஞ்சானுமா இரண்டு புள்ள துரை, ஹாஸ்டல்ல விட்டுட்டு வந்துருக்கன், அதுக்கோசரம் தான் இந்த பொழப்பு'
'வீட்டு வேலைக்கு போவலாமே!'
'இருந்தன் துரை, மூணு இடத்துல இருந்து பாத்தேன், பொறம்போக்கு சீவணம் வாத்யாரே, முப்பதாயிரம் கட்டிட்டு வந்தேன், ஆறு மாசம் ஆச்சு போட்ட மொதுல கையில பார்க்க, இதில ஆயிரம் நொட்னம், சோறு குழம்பு வைக்கலாம், துணிமணி துவைச்சிப்போடலாம், அலம்பி விட சொல்றாளுங்க துரை
அந்த நாரப் பொழப்புக்கு தேவிடியாத்தனம் பெட்டர்னு பூந்துட்டன், எனக்கு என்னா குறை துரை, சாவரக் கட்டை தானே'
'போலிஸ் ரெய்டு பண்ணா என்னாறது'
'அட நீ வேற, அதெல்லாம் இரண்டு தடவை ரெவ்வெண்டு மாசம் டேஷன் பாத்துட்டன், அவுத்துப்போட்டு எக்ஸஸைஸ் பண்ணியாச்சு, மூவாயிரம் தூக்கிப்போட்டா ஊர்ல புது பாஸ்போர்ட்டு, அம்சாவோ, அஞ்சலையோ பேர் மாத்தி இறங்கிட வேண்டியது தான், துட்டு சாமி துட்டு'
'என்னை கூட்டி வந்தாரே அவர் யாரு?'
'அதுவா, என் ஆம்படையான்' சிரித்தாள்
'நெஜம்மாவா'
'ம், அந்த கசனாரிப்பயளுக்கு மூணு பொண்டாட்டி, என்னை இங்க விட்டு சம்பாரிக்கிறான், இவன் இங்க கிடந்த ஏஜெண்டு பய தான், வந்த புதுசில இப்ப இருக்கற மாதிரி தாட்டியா இருக்கமாட்டேன், பூசனமாதிரி ஒல்லிசா வெட்டுக்கிளியாட்டம் இருப்பேன், பாத்த கண்ணு பத்திக்கும், சுராங்கு ஈஸ்டு இல்ல முரு(க)வன் கோயிலு, அங்க வச்சு தான் தாலி கட்டுணான், தொங்க தொங்க தாலியக் கட்டிக்கிட்டு குடித்தனம் பண்ண ஆரம்பிச்சன், ஒரு மாசந்தான் வாத்யாரே, எல்லா இடத்தையும் சுத்தி காமிச்சான், கேஎப்சி யில சிக்கன்லாம் வாங்கித்தருவான், சத்தியமா சொல்றன் துரை, கெர்பா ஓட்டலோ, கெல்லாங்கோ இருக்கற இடம் கூட அப்பல்லாம் எனக்கு தெரியாது, இட்டுக்கிட்டு போனான், பீர் வாங்கி கொடுத்தான், இது தாண்டி நீ நிரந்தரமா தொழில் பன்னவேண்டிய இடம்னு ரோட்ல உட்டுட்டான், தினம் நூறு வெள்ளி தராட்டி செருப்பாலியே மாங்கு மாங்குன்னு சாத்துவான், நீ சாப்ட்டியா?'
'ம்'
'செட்டிங்பார்ட்டி வந்தானுங்கன்னா கூடவே மீனு மண்டை கொண்டாருவானுங்க'
'அது யாரு?'
'உண்டியல் பார்ட்டிங்க, பத்து வெள்ளி கூடத்தர்ர மவராசனுங்க'
அவள் என் அருகில் வந்து உட்கார்ந்துக்கொண்டாள்
'எஸ் பாஸா'
'இல்ல பிஸினஸ்'
'கல்யாணம் கட்டிட்டியா இல்லியா?'
'இல்ல'
'காலங்காலத்துல கண்ணி கழிச்சிக்க, சொல்லனும்னு இல்ல சொல்றன், குள்ளமா இருக்கறதுல உன் வயசு தெரியல, அடிக்கடி இப்படி வந்தேன்னா நல்லாருக்காது, போவாதவக்கிட்ட போயிட்டன்னா பத்து பைசாவுக்கு பேரமாட்ட, நீத்துப்பூடுவ'
'இது தான் முதல் தடவை'
'அடிங், வர்ர எல்லாத்துக்கும் ஒரே பதிலை தான் பேசி வைச்சிக்கினு தான் வருவீங்களா மைனருங்களா!' என் கண்ணம் கிள்ளி சிரித்தாள்
'இல்ல உண்மை தான்'
என் அருகில் அமர்ந்திருந்தவள் பொட்டென என் மடியில் சாய்ந்தாள், அவள் முதுகு தட்டி கண்கள் திறந்து கேட்பதற்குள் மயக்கமானாள், அருகில் வைத்திருந்த குளிர்பாணம் எடுத்து முகத்தில் அடித்தேன், கண் திறந்தாள்.
'என்னாச்சு!'
'இப்படிதான் எப்பனாச்சும் சுத்தும்' என்று ஈனசுரத்தில் பேசினாள்
'ஆஸ்பத்திரி போலாமா!'
'வேணாந் துரை, நீ ஒண்ணு பண்ணு, அப்படியே விட்டுட்டு நீ போ, எனக்கு தானா சரியாயிடும், நாளைக்கா வா, இது தான் என் நம்பரு அடி'
'இதப்பார் போய் ஒரு ஊசி போட்டுட்டு வந்துடலாம், கிளம்பு'
'துரை, காசு என்னா துரை, மனுஷன், நீ மனுஷன் துரை, நல்லபடியா நாலு வார்த்தை பேசற, வர்ர நாதாரி மவனுங்க அவுத்துப் போடுடின்னு ஆட்டத்துக்கு நிப்பானுங்க, அம்பது வெள்ளிக்கு சாவடிச்சுடுவானுங்க துரை, நீ மனுஷன் துரை'
அவள் கண்ணிலிருந்து கண்ணீர் கோடாய் இறங்கியது.
'எப்பல்லாம் இப்படி?' அவள் கண்ணம் தட்டினேன்
'கொஞ்ச நாளா தான்!'
'கொஞ்ச நாள்னா?'
'ஒரு ஆறு மாசமா தான் துரை, திங்கற சோறு வவுத்துல ஒட்டமாட்டங்குது, சாயங்காலம் ஆச்சுன்னா போதும் சுரம் அடிக்க ஆரம்பிச்சிடும், பொட்டுன்னு அரை பாட்டில் ரம்முல நாலு மாத்திரை போடுவேன், காணாமல் போயிடும், என் புருஷன் என்னை கண்டுக்கல, அவனுக்கு பொறந்ததுங்க இல்லை என் புள்ளைங்க, அதனால அவனுக்கு ஆசை எட்டிக்கா, என் கும்பி கொதிக்குது துரை, அதுகளை அநாதியா விட்டுட்டு வந்து இந்த ஈனத்தொழிலு பண்றது, எனக்கு சாவு நல்ல சாவு இல்ல துரை'
'அப்படி சொல்லாதே, சரிப் பண்ணிடலாம்'
'உன் வாயில சக்கர போடணும் துரை, நீ உத்தமன் துரை, எவ்வளவு பாசமா பேசற'
அவள் காட்டிய மேசையிலிருந்து இரண்டு மூண்று ஆண்டிபயாட்டிக் மாத்திரைகளை எடுத்துக் கொடுத்தேன், அவள் ரம்மில் விழுங்கினாள், அப்படியே என் மடியில் கிடந்தாள்
அவளை அனைத்துக்கொண்டு மருத்துவமனை சென்றேன்,
இரத்த பரிசோதனை, வைடால் பரிசோதனை எல்லாம் எடுத்து அவளை அந்த தனியார் மருத்துவமனையிலிருந்து வெளியே கொண்டுவந்து விட்டு சூடாக டீ வாங்கித்தந்தேன்.
'என்னா துரை சொல்றாங்க?' குரலில் அதிர்ச்சி தெரிந்தது
'கொஞ்சம் பொருத்து ரிப்போர்ட் பாத்துட்டு தான் சொல்வாங்க, உனக்கு ஒன்னும் இல்ல'
'என்னன்னு?'
'சாயங்காலம் தானே ஜுரம் அடிக்கிறதா சொன்ன, ஜன்னியா, டெங்குவான்னு தெரிஞ்சுடும்'
'துரை!'
'சொல்லு!'
'எனக்கு என்னாச்சும் ஒன்னுன்னா எம் புள்ளைங்க நடுத்தெருவுல நின்னுடும் துரை, அதுகளுக்கு எடுத்துக்கட்டி செய்ய ஆளுபாது இல்ல, என் ஆத்தாக்காரி அறுத்து விட்டுடுவா, நான் அனுப்பி வைக்கிற பணத்துல தான் தண்ணி ஊத்தறா, மாமன் மச்சான் தோளான் தொப்புடியான்னு ஒரு பய எடுத்துக்கட்டி செய்யமாட்டான், அதுவோளுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி பாத்துடனும், நான் செத்துடுவனா துரை!'
'ச்ச....ச்ச'
'செத்தாலும், உன்னை மாதிரி ஒரு மனுஷன் கிடைக்கமாட்டான் துரை, போதும் துரை, என் புள்ளைங்க மூஞ்சிய பாத்துக்கிட்டு இனி கிடந்துடுவன் துரை, உசுரு மேல பயம் வந்துடுச்சி துரை, நீ சாமி, என்னை கொண்டாந்து சேத்த பாரு, அதான்'
உள்ளே அழைத்தார்கள்
அவளை ஒரு ஓரமாக வெளியே உட்கார சொல்லிவிட்டு உள்ளே சென்றேன், ரிப்போர்ட்டுகளை வாங்கினேன், பணம் கட்டிவிட்டு வெளியே வந்தேன், வரும்போதே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.
'ஒன்னும் இல்லாத விஷயத்துக்கு நான் கூட பயந்துட்டன்'
'என்னா சொல்ற துரை?'
'உனக்கு பிரஷர் இருக்கு, சக்கரை ஜாஸ்தியா இருக்கு, அப்ப அப்ப நீ உடம்பை காட்டியிருக்கனும், டேபிளட் எடுத்துக்க, சரியா' அவளிடம் மாத்திரை அட்டைகளை கொடுத்து காலை மாலை என்று வேளாவேளைக்கு பிரித்துக் கொடுத்தேன்
'ரொம்ப தேங்ஸ் துரை!'
'உன் பேர் என்ன?'
'பாஸ்போர்ட்டுல இருக்கறத கேக்கறியா, மெய்யாலுமே கேக்கறியா?'
'ஏதோ ஒன்னு சொல்லு'
'சரி, அம்புரோஸ், ரோஸுன்னு கூப்புடு'
'ரோஸ், நீ ஊருக்கு போறதுதான் நல்லது!'
'ஏன் துரை, எதாவது சொல்லிட்டாங்களா?'
'அது இல்ல, உனக்கு உடம்பு சரியாயில்ல, இப்படி அடிக்கடி நடந்தா உன்னை யார் பாத்துப்பா, நீ உன் பிள்ளைங்களுக்கு ஆதரவு இல்லேன்னும் சொல்ற, பேசாம ஊருக்குப் போ, உடம்பை காட்டிக்க, இதில எழுதியிருக்கிற மாத்திரைகளை தவறாம எடுத்துக்க, புரியுதா?'
'அதெல்லாம் சரி துரை, எனக்கு ஒன்னும் இல்ல இல்ல!'
'இருந்தா சொல்லமாட்டனா!, ஊருக்குப் போறியா!'
'கொஞ்சம் கடன் இருக்கு, அடைச்சிட்டு போயிற்றனே!'
'காசு எப்பவேனா சம்பாரிக்கலாம், முதல்ல உடம்பை பத்துக்க'
'ஆமாம் துரை!, இந்த நாசமத்த பயலுவோல்ட்ட சந்தி சிரிச்சி சின்னாபின்னமாவறதை விட இனி நானாச்சு நாலு முழ கவுறாச்சு, எல்லாத்தையும் பாத்துட்டன், ஒரு நாளைக்கு எத்தினியோ சம்பாரிச்சிட்டன், தண்ணி காசு தண்ணியோட போவுன்ற மாதிரி, இந்த கருமாந்தர காசு கதியத்து தான் போவும், போலிஸும் இனிமே புடிச்சா மொத்தமா மொட்டையடிச்சி வருஷக்கணக்குல போட்டுடுவாங்க, நாளைக்கு ஆத்தாக்காரியாட்டம் தெருவுல நின்னு போற வர்ரவனை பாக்கக்கூடது எம்பொண்ணுங்க, படிக்க வைக்கணும், ஒரு டீச்சர் ட்ரெயினிங்காவது சேத்துடனும், பெரியவ கெட்டிக்காரி, போல்(லி)ஸாக்கனும் துரை'
அன்புரோஸை ஒரு வாடகை பிடித்து கை செலவுக்கு பணம் கொடுத்து ஏற்றிவிட்டேன்
'எனக்கு ஒன்னும் இல்ல இல்ல!'
'உன் மேல சத்தியம், இருந்தா இப்படியெல்லாம் உங்கிட்ட பேசிக்கிட்டு இருப்பனா, கதவை நல்லா சாத்திக்க'
'டிரைவர், ஒன் மினிட், சாரி'
அவள் காரை விட்டு வெளியே வந்து என்னிடம் சொன்னாள்
'இப்ப சந்தோஷமா இருக்கேன் துரை, உன்னை நம்பறன் நான், ஏன் மூஞ்சை உம்முன்னு வைச்சிருக்க'
'ஒன்னும் இல்ல!'
'சிரி துரை, சிரி, நீயும் சிரி, நாணும் சிரிக்கிறன், அதுவே தான் எல்லாம்'
'ஆமாம்!' என்றேன்
அவள் கார் என் கண்களை விட்டு மறைந்தது
வைடால் டெஸ்ட் பாஸிட்டிவ், அன்புரோஸுக்கு எயிட்ஸ், இதை யாரிடம் போய் சொல்வேன், நானே ஒரு பொம்பளை புரோக்கராக இருந்துக்கொண்டு எப்படி என் கஸ்டமர்களுக்கு இப்பேர்பட்டவளை சப்ளை செய்வேன்....

No comments: